Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் துறை அமைச்சர் பதவி: கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு டெல்டா அ.தி.மு.க.வினர் அதிருப்தி?

நவம்பர் 02, 2020 08:16

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டதில் டெல்டா மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பாபநாசம் அருகே வன்னியடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமைச்சர் துரைக்கண்ணு வசம் இருந்த வேளாண்துறை இலாகா யாருக்கு ஒதுக்கப்படும்? என்பது தீவிரமான விவாதமாக இருந்தது. டெல்டா பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு என்பதால் பட்டுக்கோட்டை, பேராவூரணி எம்.எல்.ஏக்கள் இருவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முத்த நிர்வாகியான வைத்தியலிங்கத்துக்கு தான் விவசாயத்துறை ஒதுக்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜாதிய அடிப்படையில் தமக்கே விவசாயத்துறை இலாகாவை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது டெல்டா அ.தி.மு.க.வில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் டெல்டாவில் தேர்தல் நேரத்தில் இத்தகைய அதிருப்திக்கு இடம் தந்திருக்க தேவை இல்லை என்பது அ.தி.மு.க. சீனியர்கள் கருத்து. இதேபோல் தாம் வலியுறுத்திய நிலையிலும் வேளாண்துறை இலாகா ஒதுக்கப்படவில்லை என்கிற ஆதங்கத்தில் இருக்கிறாராம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். இருப்பினும் தேர்தல் நேரத்து இந்த சலசலப்புகளை சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் அ.தி.மு.க. மேலிடம் இருக்கிறதாம். இதற்காக டெல்டா மற்றும் வடமாவட்ட சீனியர்கள் மூலம் சமாதான முயற்சிகள் இன்னொரு பக்கம் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் வரும் 2021ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் இப்பிரச்னை முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்