Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு 53.54  சதவீதம்: நக்சலைட்கள் அச்சத்தால் வீட்டில் முடங்கிய மக்கள்

அக்டோபர் 29, 2020 07:53

பாட்னா: பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நடைபெற்று முடிந்தது.. மாலை 6 மணி வரை மொத்தம் 53.54 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழ்வில்லை. இருப்பினும் நக்சலைட்கள் அச்சத்தால் பலர் வாக்களிக்க வராமல் வீட்டிலேயே முடங்கினர்.

பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு துவங்கின. கொரோனா காலத்தில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. நக்சலைட்கள் நிறைந்த பீகாரின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகளை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர் இச்சம்பவத்தால் அப்பகுதி வாக்காளர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பலர் வாக்களிக்க விரும்பாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். 
ஆனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். மற்றபடி பெரிய அளவில், எங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை. நேற்றுமுன்தினம் மதியம் 3 மணிவரை 46 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை முதலே மக்கள் சிலர் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்வு மையங்களில் கொரோனா பரவல் தடுப்புக்கு நிறைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடக்கிறது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. நவம்பர் 3ம் தேதி இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி வெளியாகும்.

என்.டி.ஏ கூட்டணியில், ஜே.டி.யு 115 இடங்களிலும், பா.ஜ.க. 110, விகாஷீல் இன்சான் கட்சி 11 இடங்களிலும், ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன.தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது மகாகட்பந்தன் கூட்டணி. இந்த கூட்டணியில், ஆர்.ஜே.டி. 144 இடங்களிலும், காங்கிரஸ் 70, சி.பி.ஐ.-எம்.எல். 19, இ.கம்யூ கட்சி 6 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய பீகார் ஓட்டுப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது. நக்சல் பாதித்த பகுதிகளில் ஒரு மணி நேரம் முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மாநில அமைச்சர்களில் 6 பேர் போட்டியிட்டனர். முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி களத்தில் நிற்கும் மற்றொரு வி.ஐ.பி.யாகும். 72 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குபதிவு முடிந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 53.54 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இது 2020: 2015 தேர்தலை விட இந்த வாக்குபதிவு சதவீதம் குறைவு என்று கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் மாலை 6 மணி வரை, ஷெய்க்புராவில் 55.96 சதவீதம், பாட்னாவில் 52.51 சதவீதம்,  போஜ்பூரில் 48.29 சதவீதம், பக்சரில் 54.07 சதவீதம், கைமூரில் 56.20 சதவீதம், ரோஹ்தாஸில் 49.59 சதவீதம், அர்வாலில் 53.85 சதவீதம், ஜெஹனாபாத்தில் 53.93 சதவீதம், கயா 57.05 சதவீதம், நவாடா 52.34 சதவீதம், ஜமுய் -57.41 சதவீதம். இது தவிர, பாகல்பூரில் 54.20 சதவீதம், பாங்காவில் 59.57 சதவீதம், முங்கரில் 47.36 சதவீதம், லகிசாரையில் 55.44 சதவீதம் வாக்கு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் நடந்த முதற்கட்டமாக சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக பாங்காவில் மட்டும் 59.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்