Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருள் தரும் நவராத்திரி!

அக்டோபர் 27, 2020 04:17

இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி  பண்டிகை.  இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது. ஒரு விதத்தில் , நவராத்திரி திருவிழா கொண்டாடுவதால் நம் ஆன்மீக ஆற்றல்கள் வெளிப்படுகிறது.நம் ஆன்மிக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம்.அதாவது கல்வி,செல்வம்,வீரம் இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயமாகும்.

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும்.  எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும். 

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் தொடக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.
நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளைத் தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது. நவராத்திரி தினங்களில் தேவிக்கு அலங்காரங்கள் என்ன, நவராத்திரி தினங்களின் ஒவ்வொரு நாளுக்கான பெருமைகள் என்ன, நாம் எப்படி அன்னையை வணங்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்...

நவராத்திரி  ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான துர்கையை வழிபட வேண்டும்.அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற லட்சுமியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். 

ஒன்பதாம் நாள் பூஜையை ஆயுத பூஜை நாள் என்று கூறுவார்கள். அயூத பூஜை என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக ஒருவர் பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவது தான் ஆயுத பூஜையின் சிறப்பு. அனைவரும் இந்நாளில் தங்கள் கருவிகளை தெய்வத்தின் பலிபீடத்தின் முன் வைத்து வணங்குவர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு தான் பயன்படுத்தும் கருவிகளுக்கு முன்பாக சிரம் பணிந்து தொடங்குவது வழக்கம்; இது ஒருவரின் கடமைகளை நிறைவேற்ற உதவியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகும்.

குழந்தைகள் இந்நாளில் தங்கள் படிப்பு புத்தகங்களையும் எழுதும் கருவிகளையும் பலிபீடத்தின் மீது வைத்து வணங்குவார்கள். இந்த நாளில், எந்த வேலையும் படிப்பும் செய்யப்படுவதில்லை. பத்தாம் நாள் விஜய தசமி என்று அழைக்கப்படுகிறது. சரஸ்வதியின் ஆசீர்வாதங்களைப் பெற பக்தர்கள் சரஸ்வதி பூஜை (வித்யாரம்பம்) செய்கிறார்கள். மஹிஷாசுரன் என்ற அரக்கனை வென்றதற்காக சில பக்தர்கள் துர்காவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகளையும் செய்கிறார்கள். வித்யாரம்பம் என்பது அறிவாற்றலை பெறுவதற்கு தொடங்கும் நாளாகும் மற்றூம் சிறு குழத்தைகள் கல்வி கற்க இந்நாளில் தான் ஆரம்பிப்பார்கள். நாம் எப்போதும் ஒரு தொடக்க மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.”என்பதற்காக இந்நாளைக் கொண்டாடுகிறோம்.

 நவராத்திரியில் விரதம் இருந்தால் அது நல்ல பலன்களை கொடுக்கும்.  நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், கல்வி கேள்விகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருள்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களை பயன்படுத்துவது சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை... குமாரி முதலாக 9 வடிவங்களாகப் பாவித்து வழிபடுவது மரபு. அன்னை சக்தியை மட்டுமல்லாமல், அன்னை சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிடும் அற்புத வைபவமே நவராத்திரித் திருவிழா! பெண்களைப் போற்றிடும் புண்ணிய பாரதத்தில், அன்னை சக்தியுடன் பெண்களையும் தேவியின் வடிவங்களாக வழிபடும் நவராத்திரி ஒன்பது நாள்களும் நாம் செய்யும் தேவி பூஜை, நம்மையும் நம் சந்ததியினரையும் காலம் முழுவதும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்யும்.

தலைப்புச்செய்திகள்