Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார்: பீகார் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

அக்டோபர் 23, 2020 12:27

ஹிசார்: பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம்,''  என்றும் ராகுல் காந்தி பேசினார். பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், நவடா மாவட்டம் ஹிசுவாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி அவர்களே பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம். பீகார் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினீர்களா? கடந்த தேர்தலில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், யாரும் வேலை பெறவில்லை. பொது இடத்தில் பிரதமர் பேசும்போது ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று கூறுகிறார். ஆனால், அவர் வீட்டிற்கு வந்ததும், அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார்.

விவசாயிகளை பாதிக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு உருவாக்கியுள்ளது. அவர்கள் பீகாரில் மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை முதலில் முடிவுக்கு கொண்டுவந்தனர். இப்போது அவர்கள் அதை நாடு முழுவதிலும் செய்கிறார்கள். லட்சக்கணக்கானோரை வேலையில்லாமல் ஆக்கப்போகிறார் பிரதமர். அவர் எங்கு சென்றாலும் பொய்களை மட்டுமே சொல்கிறார். இவ்வாறு ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.

தலைப்புச்செய்திகள்