Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும்: டி.கே.சிவக்குமார்

அக்டோபர் 22, 2020 07:40

பெங்களூரு: கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் டி.பி.ஜெயச்சந்திராவை ஆதரித்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று சிராவில் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-

வடகர்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆனால் அங்கு உள்ள மக்களுக்கு உதவி செய்ய மந்திரிகள் முன்வரவில்லை. மக்கள் கஷ்டங்களை தீர்க்க அரசு இல்லை. இடைத்தேர்தலை எனது மகன் விஜயேந்திரா முன்நின்று நடத்துவார் என்று எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க பா.ஜனதா மேலிடம் என்ன வேண்டுமானாலும் செய்யும். அது அவர்களது கட்சி பிரச்சினை. தேர்தல் நடக்க உள்ளதையொட்டி எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதை மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேர்தல் குறித்து நாங்கள் கணக்கெடுப்பு நடத்தியதில் எங்களுக்கு 44 சதவீத மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்து உள்ளது. மற்ற 2 கட்சிகளுக்கும் சேர்த்து 43 சதவீதம் ஆதரவு இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சி.டி.ரவி தேசிய தலைவர். அவரை பற்றி பேச முடியாது.

2 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் உயர்ந்தவரும் அல்ல. யாரும் குறைவானரும் இல்லை. கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு பிரச்சினையை கையில் எடுத்து காங்கிரஸ் போராடுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்கினோம். அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினோம். இடைத்தேர்தல் மூலம் அரசு மாறும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நாங்கள் ஆட்சியில் இருந்த போது குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்