Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘நீட்’தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை முயற்சி

அக்டோபர் 18, 2020 05:38

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜேந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் ரம்யா(வயது 19). இவர் கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதி இருந்தார். நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியானதில் ரம்யா, குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் மாணவி ரம்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசாமல் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து அவர் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவி ரம்யாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்