Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

அக்டோபர் 15, 2020 07:35

சென்னை: தமிழகத்தில் இன்று 16ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்,'' என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் தீபாவளிக்கு நீண்ட துாரம் ஊருக்குச் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டன.

பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு கடுமையான சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் அவசர தேவைகளுக்கான இயக்கத்துக்கு இ-பாஸ்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு பொது முடக்கமானது வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கும், பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கும் அரசு பேருந்துகளும் ஒரு சில ஆம்னி பேருந்துகளும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பேருந்துகளை இயக்காததால் கடும் நெருக்கடியில் இருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பேருந்துகள் ஓடாத மாதங்களில் செலுத்த வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தனர். இன்சூரன்ஸை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்து அனுமதி தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர்,  உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பேருந்துகளை இயக்காதது தொலைதுார பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 16ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்