Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்பு அதிரடி டிஸ்மிஸ்

அக்டோபர் 12, 2020 12:33

சென்னை: பா.ஜ.க.வில் குஷ்பு சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவியது.

கடந்த மாதம் 29ம் தேதி குஷ்பு பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வழக்கம் போல பா.ஜ.க. தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். குஷ்பு வெளிப்படையாக எதையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைவது உறுதியாக இருப்பதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டனர். கடந்தவாரம் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்து பேசினார் குஷ்பு. பணம் வாங்கிக்கொண்டு ட்விட்டரில் தன்னைப்பற்றி வதந்தி பரப்புவதாக பேசினார் குஷ்பு.

கடந்த வாரம் டெல்லி சென்ற குஷ்பு சோனியாகாந்தியை சந்தித்து பேச முயற்சி செய்தும் அதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் அதற்காகவே அவர் டெல்லி சென்றார். அந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து குஷ்பு சென்னை திரும்பினார். தனது டெல்லி பயணம் இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார் குஷ்பு. இந்த நிலையில் நேற்று டெல்லி சென்றுள்ள குஷ்பு பா.ஜ.க.வில் இணைய உள்ள நிலையில் அவரது கட்சி பதவியை பறித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

* குஷ்பு பா.ஜ.க.வில் இணையப்போவது குறித்து கருத்து கூறியுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வில் குஷ்பூ இணைவது மகிழ்ச்சியே, குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க! என்று தெரிவித்துள்ளார். யாராக இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமிதான் அவரை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கறாரக கூறியுள்ளார்.

முதலில் தி.மு.க. அடுத்து காங்கிரஸ், விரைவில் பா.ஜ.க. இப்படியே போனால் எந்த கட்சியிலும் நடிகை குஷ்புவுக்கு மரியாதை இருக்காது. அவர் எதையோ எதிர்பார்த்து தான் ஒவ்வொரு கட்சிக்கும் செல்கிறார். அது நடக்கவில்லை என்ற போது தான் ஒவ்வொரு கட்சியாக தாவி வருகிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்