Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர். சாதிக்காததை ஜெயலலிதா சாதித்தார்: அமைச்சர் உதயகுமார் பேச்சால் மீண்டும் சர்ச்சை! 

அக்டோபர் 11, 2020 10:17

மதுரை: எம்.ஜி.ஆரால் சாதிக்க முடியாததை கூட ஜெயலலிதா சாதித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ள சம்பவம் அ.தி.மு.க., வில் எம்.ஜி.ஆர். அபிமானிகளிடையே சலசலப்சபை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் நிர்வாகத்திறமையோடு ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசி அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜெயலலிதாவை புகழ்வதாக நினைத்து எம்.ஜி.ஆரை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைச்சர் உதயகுமார் பேசியிருப்பது அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் கூறும் கருத்துக்கள் அவர்களை அறியாமல் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதுவென்ன என்றால், எம்.ஜி.ஆரே சாதிக்காததை ஜெயலலிதா சாதித்துள்ளார் என்பது தான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்தார் ஜெயலலிதா என்றார். 

எம்.ஜி.ஆர். காலத்தில் கூட இப்படி தேர்தலை சந்தித்ததில்லை என்பது தான் அவரது பேட்டியின் சாரம்சம். இதில் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஒப்பீடே தேவையில்லை. ஆனால், அமைச்சர் உதயகுமார் யதார்த்தமாக கூறிய கருத்து எம்.ஜி.ஆர். அபிமானிகளை அதிருப்திக்கொள்ளச் செய்துள்ளது. தி.மு.க.வில் எதுவும் நடக்காதது போல் அமைதியாக வெளியில் தெரிந்தாலும் உள்ளே பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் தி.மு.க.வில் பூகம்பம் வெடிக்கக்கூடும் எனவும் அமைச்சர் உதயகுமார் கூறினார். சர்வாதிகாரப் போக்குடன் ஸ்டாலின் தி.மு.க.வை வழிநடத்திச் செல்வதாக விமர்சித்த அவர், கருத்துப் பரிமாற்றங்களுக்கு அங்கு இடமில்லை எனக் கூறினார்.

அ.தி.மு.க.வில் ஆரோக்கியமான முறையில் கருத்துப்பரிமாற்றங்கள், ஆலோசனைகள் நடப்பதாகவும் தி.மு.க.வில் சர்வாதிகாரம் மட்டும் தான் உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டார். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. 3-வது முறையாக தொடர்ச்சியாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்