Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களுக்கிடையே இ-பாஸ் எதற்கு? தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

அக்டோபர் 10, 2020 09:45

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில், தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தி படிப்படியாக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இ- பாஸ் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு அதனை மீறும் வகையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களும், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை ஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளது சட்டவிரோதம் என சென்னையை சேர்ந்த எழில்நதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ- பாஸ் பெற வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிய இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வெளிநாட்டில் இருந்தோ, வெளிமாநிலத்தில் இருந்தோ தமிழகம் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. கொரோனா பரவும் சூழலில் சம்மந்தப்பட்டவருக்கு தொற்று உறுதியாகும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் உடன் பயணித்தவர்களை கண்டறிய உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே தானியங்கி முறையில் இ-பாஸ் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில், தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்