Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 09, 2020 12:19

சென்னை: அந்தமானை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தனது பேட்டியில் அந்தமான் கடல் பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று 10ம் தேதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கியது. செப்டம்பர் இறுதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விடும். அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். இந்த ஆண்டு இன்னமும் தென்மேற்கு பருவமழை நீடிக்கிறது.  வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியினால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்