Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்: சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் தகவல்

அக்டோபர் 08, 2020 05:47

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,''  என்று கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பர்கூரில் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட முகாமினை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.

பிறகுசெய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 4,993 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இப்பொழுது 245 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு ஆய்வகங்கள் மற்றும் ஒரு தனியார் ஆய்வகத்தின் மூலம் இதுவரை 53 ஆயிரத்து 284 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி நாளொன்றுக்கு சுமார் 1,200 முதல் 1,400 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்