Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரகளை: 20க்கும் மேற்பட்டோர் காயம்: போலீஸ் குவிப்பு

அக்டோபர் 06, 2020 11:54

மதுரை: மதுரையிலுள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட ரகளையில் 20க்கும் மேற்பட்ட சிறார் குற்றவாளிகள் படுகாயம் அடைந்ததால் அப்பகுதயில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை காமராஜர் சாலை பகுதியிலுள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 40 சிறார் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் வழங்க மறுப்பதாகவும், தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்தும் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சமையல் பொருட்கள், டிவி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தையின் போது சிறார் குற்றவாளிகள் தங்களை தாங்களே பிளேடுகளால் அறுத்து காயம் ஏற்படுத்தியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  மேலும் வடக்கு வட்டாச்சியர் சிறார் குற்றவாளிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். சிறார்களின் ரகளையை தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தின் முன்பாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே பேச்சுவார்த்தைக்கு சென்ற காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மாஜிஸ்திரேட் சந்திரசேகர் நேரில் விசாரணை நடத்தினார். மதுரையிலுள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட ரகளை காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்