Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 ஆண்டாக ஆட்சியே நடக்கவில்லையே நாற்காலியை காக்ககத்தானே போராட்டம்-மு.க.ஸ்டாலின்

அக்டோபர் 05, 2020 10:21

சென்னை: ''தமிழகத்தில் 4 ஆண்டுகளாக ஆட்சியே நடைபெறவில்லை. நாற்காலியைக் காக்கும் போராட்டம் தான் நடைபெறுகிறது,'' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. ஏற்பாடு செய்த முப்பெரும் விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஸ்டாலின் பேசியதாவது: வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல் உலகம் - என்று போற்றப்படுகின்ற குமரி முனையில் நடைபெறக் கூடிய கழகத்தின் முப்பெரும் விழாவில் காணொலிக் காட்சி மூலமாகப் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்பை வழங்கிய மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் ஆகிய இருவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால், நானே நேரில் அங்கு வந்து உங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருப்பேன். ஆனால் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருந்தாலும் முப்பெரும் விழாவை நடத்தும் கடமையில் இருந்து நாம் நழுவவில்லை. காணொலிக் காட்சி மூலமாக நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
எமர்ஜென்சி காலமாக இருந்தாலும்,  கொரோனா காலமாக இருந்தாலும்,  கழகப் பணிகளிலோ, மக்கள் பணிகளிலோ கழகம் என்றைக்கும் பின் வாங்கியது இல்லை என்பதற்கு உதாரணம் தான், இந்தக் காணொலிக் காட்சி முப்பெரும் விழா ஆகும்.

கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முதலில் முப்பெரும் விழாவை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தினோம். கானொலிக் காட்சி மூலமாகவும் பல்வேறு தொலைக்காட்சிகள் மூலமாகவும் அதனை ஒளிபரப்பினோம். அதைப் பார்த்து கரூர் மாவட்டக் கழகம் முப்பெரும் விழாவை நடத்தியது. தற்போது கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் நடத்துகிறோம். இதே வாரத்தில் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் நடத்துகின்றன. இப்படி அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கிறோம். பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது.  விழாக்கள் நடத்தக் கூடாது. கிராம சபைக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று எந்தத் தடை போட்டாலும் அந்தக் கூட்டங்களை எப்படியாவது நடத்திக் காட்டும் கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் பட்டாளம் என்பதை நிரூபித்து வருகிறோம்.

திராவிட இயக்கத்தின் தொடக்க காலம் முதல் இயக்கத்துக்கு வலிமையான அடித்தளம் அமைத்த பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சொல்லலாம். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதுமே குமரி பகுதியில் கோட்டாறு என்ற ஊரில் சுயமரியாதை வாசகசாலை தொடங்கப்பட்டது. வைக்கம் சென்று போராடிய பெரியார், குமரி வட்டாரத்தில் உள்ள சுசீந்திரம் கோவில் நுழைவுப் போராட்டத்திலும் பங்கெடுத்தார். ஆதரித்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

குமரி மாவட்டமானது இன்றைக்குத் தமிழ்நாட்டுடன் இருந்தாலும் 1956-க்கு முன்னதாக திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தென் எல்லையில் போராட்டம் நடந்தது. அப்போது பேரறிஞர் அண்ணா அந்தப் போராட்டத்தை முழுமையாக ஆதரித்தார்கள். இந்தப் போராட்டத்தை நடத்திய அமைப்பின் பெயர் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்பதாகும். காங்கிரஸ் என்று இன்னொரு கட்சிப் பெயர் இருப்பதால் கழகம் கலந்து கொள்ளக் கூடாது என்பது அல்ல, கழகம் இப்போராட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ளும் என்று சொன்னார்கள்.

தென் எல்லையில் நடந்த போராட்டத்தை ஆதரித்து சித்தூர் தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தென் எல்லைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நாகர்கோவிலுக்கே அண்ணா வருகை தந்தார்கள். தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கியது தி.மு.க. தற்போது தமிழகத்தில் 4 ஆண்டுகளாக ஆட்சியே நடைபெறவில்லை. நாற்காலியைக் காக்கும் போராட்டம் தான் நடைபெறுகிறது. இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்