Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

"சைலன்ட் யுத்தம்" 7ம் தேதி வரப் போகுது: ஏழரை வராமல் தவிர்க்க அ.தி.மு.க. தீவிரம்

அக்டோபர் 04, 2020 05:57

சென்னை: ஒருத்தருக்கொருத்தர் பார்த்து கொண்டார்களாம். வணக்கம் சொல்லி கொண்டார்களாம். ஆனால், பேசிக் கொள்ளவில்லையாம். "முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருதாய் பிள்ளையாகவும், ராமர், லட்சுமணர் போலவும் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் சொல்லியிருந்த நிலையில் தான், இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அ.தி.மு.க.வுக்குள் அடுத்தடுத்த நடந்து வரும் நிகழ்வுகளை கண்டு ரத்தத்தின் ரத்தங்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. நிர்வாகிகளே குழம்பி போயுள்ளனர்.

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அரசு சார்பில், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பிறகு காமராஜர் நினைவு தினத்தை ஒட்டி, கிண்டியில் உள்ள, அவரது நினைவிடத்திற்கு சென்று, அங்கும் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை வெடித்ததற்கு பிறகு, அதாவது 4 நாள் கழித்து இப்போதுதான் இவர்கள் 2 பேரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர். வணக்கம் சொல்லி கொண்டனர். ஆனால், ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.

வணக்கம் சொல்லி கொண்டதால், நிச்சயம் ஏதாவது இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், ஓ.பி.எஸ். தேனிக்கே சென்றுவிட்டது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் 7ம் தேதி தான் அவர் சென்னைக்கு திரும்பி வருவார் என தெரிகிறது. இதனால், இந்த விழாக்களை சாக்கு வைத்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த காத்திருந்த அமைச்சர்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போயினர். அப்படியென்றால், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வுதான் என்ன? இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்ததாவது: கட்சிக்குள் பெரும்பாலானோர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இருக்கிறது. வழிகாட்டு குழு அமைத்தே ஆக வேண்டும் என்று ஓ.பி.எஸ். பிடிவாதம் பிடிக்கிறார். இந்த வழிகாட்டுதல் குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 6 பேரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வக்கு 5 பேரும் இடம்பெறலாள் என்கின்றனர். ஆனால் அதை அமைத்தால் தமக்கு சிக்கல் வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.

இந்த குழுவை அமைத்துவிட்டால், வருகிற சட்டமன்ற தேர்தல்வரை இவர்கள் சொல்வது தான் எடுபடும் என்பதாலும், வேட்பாளர் பட்டியலில் இடம் கேட்டுவிடக்கூடும் என்பதாலும், தனக்கு சாதகமானஅமைச்சர்கள் அதில் இடம்பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறது. இந்த குழுவை அமைப்பதிலேயே பிரச்சனை என்றால், குழுவுக்கு யாரை தலைவராக போடுவது என்பதில் அதைவிட பிரச்சனையாக உள்ளது. அதனால், இந்த குழுவே வேண்டாம் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் இறுதியான முடிவாக இருக்கிறது.

இதற்கு பிறகுதான் துணை முதல்வரை சந்திக்க தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி முதல்வர் முயன்றுள்ளார். ஆனால், இதற்கும் ஓ.பி.எஸ். ஒத்துவரவில்லை. முதலில் வழிகாட்டுதல் குழு. அப்பறம்தான் மத்ததெல்லாம் என்பதில் ஓ.பி.எஸ்.உறுதியாக இருக்கிறாராம். இதனால் கட்சியின் சீனியர் தம்பிதுரையும் எடப்பாடியை சந்தித்து, குழு அமைக்க பேசியும், பலனில்லை.
அதனால் முதல்வரே நேரடியாக பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.. அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்க விரும்பாமல்தான் தேனிக்கு ஓ.பி.எஸ். கிளம்பி சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள். எந்தவித முடிவுக்கும் வராமல், இப்படியே 2 பக்கமும் இழுபறி சென்று கொண்டிருந்தாலும், வரும் 7-ம் தேதி தன்னை முதல்வர் வேட்பாளராக தானே அறிவித்து கொள்வதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், ஓ.பி.எஸ். சம்மதம் இல்லாமல் அதெப்படி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இயலும் என்று சில மூத்த அமைச்சர்கள் இ.பி.எஸ். தரப்பை கேள்வியும் கேட்டு வருகிறார்கள். இதை எப்படி வரும் 7-ம் தேதிக்குள் தீர்ப்பது என்று தெரியாமல்தான் மூத்த நிர்வாகிகள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்