Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மா.சுப்பிரமணியக்கு கொரோனா மனைவிக்கும் பாதிப்பால் அதிர்ச்சி

செப்டம்பர் 29, 2020 08:26

சென்னை: எப்போதுமே பரபரப்பாக இயங்கி கொண்டும், படு சுறுசுறுப்பாக ஓடி கொண்டும் இருக்கும் சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.. கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், டாக்டர்கள், அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் என எல்லோருக்குமே பாகுபாடு இன்றி தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை சென்னை மாநகர மேயராக இருந்தவர் மா.சுப்பிரமணியம். சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயம் முதல் தற்போது வரை இவர் செய்து வரும் நிவாரண பணிகள் அளப்பரியது என்றால் மிகையில்லை.

காரைக்குடியில் கொரோனா தொற்று உறுதியான சென்னைவாசிகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தவர். மாநில அரசு தொற்று விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை அடிக்கடி குற்றஞ்சாட்டி கொண்டே இருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் டாக்டர்களை நியமிக்கப்படாததுதான், தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. பிளீச்சிங் பவுடர், தெர்மல் ஸ்கேனர் வாங்கும் போதுகூட அதில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று எச்சரித்து கொண்டே இருந்தார்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளரான இவர், சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆவார். எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சுப்பிரமணியன்  தான். இவருக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் மாரத்தான் போட்டிகளில் வருடந்தோறும் தவறாமல் கலந்துகொள்வதுடன், பல கிலோமீட்டர்கள் ஓடி உலகளவு சாதனை பெற்றவர்களில் சுப்பிரமணியனும் ஒருவர். எப்போதுமே தன் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வார். இவருக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்றுதான் தெரியவில்லை. இவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவருமே தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. மா.சுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை அறிந்த  தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்