Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் வாகனங்களை வழிமறித்த யானை கூட்டம்

செப்டம்பர் 17, 2020 06:20

ஊட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் மலைப்பாதையில் 3 காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்து நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் தினமும் பஸ்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்பட 200-க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையை கடந்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன.

அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே 3 காட்டு யானைகள் அங்கும், இங்கும் சாலையில் சுற்றி திரிந்தன. மேலும் சாலையோரம் நின்றிருந்த மரக்கிளைகளை ஒடித்து தின்று அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனத்தை நிறுத்தி விட்டனர்.

யானைகள் சாலையை வழி மறித்து நின்றதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களில் இருந்தவர்கள் யானைகளை தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பினர்.

பின்னர் ஒரு வழியாக 2 மணி நேரத்திற்கு பிறகு 3 யானைகளும் சாலையில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டன. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு தங்களது வாகனங்களை இயக்கி சென்றனர். யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்