Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐரோப்பாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

செப்டம்பர் 15, 2020 10:54

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்,  பிரதேசங்களுக்கு கொரோனா பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியவர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வந்தது. அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் தினமும் சராசரியாக 1,000 உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், புதிதாக வைரஸ் பரவுபவர்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைந்திருந்தது. இதனால் அமலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், இத்தாலியில் 1 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 55 ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், ’இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாம் மீண்டும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்திக்கப்போகிறோம்’ என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்