Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் பலவீனமாகுமா நாம் தமிழர்? 

செப்டம்பர் 14, 2020 10:19

சென்னை:தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் 2 முக்கிய புள்ளிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து தடாலடியாக விலகி இருக்கிறார்கள் என்றால் என்ன காரணம்? ஒருவேளை அவங்கதான் காரணமா? இவர்கள் விலகலால் கட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கல்யாண சுந்தரம். இவர் கொஞ்ச நாளாகவே கட்சிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தன் மீதான புகாருக்கு கல்யாணம் சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த சமயத்தில்தான், சீமான் ஒரு பேட்டியில் கல்யாணம் சுந்தரம் குறித்த தனது ஆதங்கத்தையும் மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். "கட்சிக்கு வேலை செய்யாமல், கட்சிக்குள் தனக்கென வேலை செய்கிறார். சொந்த பிள்ளைகள் போன்று வளர்த்தவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததில்லை. எனக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. யாராலும் கட்சியை உடைக்க முடியாது என் சாவை தான் அவங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். இதையடுத்துதான், கட்சியில் இருந்து விலகுவதாக கல்யாண சுந்தரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சீமானுக்கு கடிதமும் எழுதினார். சீமான் பேசியதும், கல்யாண சுந்தரம் விலகியதும் மிகப்பெரிய சலசலப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி விட்டது. அதேபோல, ராஜீவ் காந்தியும் விலகி உள்ளார்.. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி.

இப்போது 2 பெரும் புள்ளிகளின் விலகல் அக்கட்சிக்கு பாதிப்பை தருமா என்பதுதான் நம்முடைய சந்தேகம். அதனால் இதுகுறித்து ஒரு கருத்து கணிப்பினை வாசகர்களிடம் நடத்தினோம். "கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி விலகலால் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு வருமா?" என்று கேள்வி கேட்கப்பட்டது. "வாய்ப்பில்லை ராஜா" 24.29 சதவீதமும், "நிச்சயம் வரும்" என்று 37.03 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "யார் அவங்க?" என்ற ஆப்ஷனுக்கு 28.27 சதவீதம் பேரும், "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 19.41 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை "நிச்சயம் பாதிப்பு வரும்" என்று 37.03 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. இதற்கு காரணம், பெரும்பாலும் இந்த கட்சி குறித்து எந்த மைனஸ் சமாச்சாரமும் வெளியே வந்ததில்லை. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் சர்ச்சைகளில், பேட்டிகளில் சிக்கியது இல்லை. சோஷியல் மீடியாவில் சுத்தி சுத்தி சீமானையே விமர்சிப்பார்களே தவிர, கட்சி நபர்கள் பற்றின செய்திகள், வதந்திகள் வெளிவந்தது இல்லை. கல்யாண சுந்தரம்தான் பிரகாசமாக தெரிந்த முதல் நபர். அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவர். கிட்டத்தட்ட 11 வருடம் சீமானுடன் பயணித்து வந்துள்ளார்.. இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வருபவை. அதேபோல, டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு காரசாரமாக பேசுவது ராஜீவ்காந்திதான். எந்த தேர்தலாக இருந்தாலும் இவர்களின் பங்களிப்பு பெரிதாகவே இருக்கும் 

பல்வேறு பலம் வாய்ந்த ஜாம்பவான்கள் என்னென்னவோ செய்து பார்த்தும் கூட அதையும் தாண்டி நாம் தமிழர் கட்சி திடமாக எழுந்து நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. யாரும் அதை மறுக்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. காரணம், ஒரு சக்தியாக நாம் தமிழர் கட்சி வளர்ந்து நிற்கிறது என்பதை நாம் கடந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளில் தெரிந்து கொண்டோம். இந்த நிலையில்தான் இந்த இருவரின் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி சீமான் என்ற பலமான அஸ்திவாரத்தின் மீது எழும்பி நிற்கும் கட்டடம் என்பதால் அந்தக் கோட்டையைக் கலகலக்க வைப்பது சாமானியமானதல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை.
 

தலைப்புச்செய்திகள்