Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் வெற்றி, தோல்வி உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது: கனிமொழி உருக்கம்

செப்டம்பர் 13, 2020 11:31

சென்னை ''நீட் தேர்வு குறித்த அச்சத்தினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய நிலையில் ஒரு தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள்,''  என்று கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்திற்கு இடையே நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். நேற்றுமுன்தினம் இரவு தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அரசியல் தலைவர்கள் மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். தேர்வினை தைரியமாக எதிர்கொள்ள நம்பிக்கை வார்த்தைகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை என்ற செய்தியை கேட்கும் போது மனம் பதைக்கிறது. மாணவர்கள் லட்சிங்களோடு இருக்கவேண்டும் என்பது உண்மை. ஆனால், தன் கனவு நிறைவேறும் முயற்சிக்கு முன்னாலேயே நம்பிக்கை இழந்து இவர்கள் இந்த முடிவை எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கை என்பது பல வாய்ப்புகளைத் தரும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் பல சாதனைகளை செய்த தலைவர்கள், சாதனையாளர்கள் பலநேரங்களில் தோற்றவர்கள்தான். எனது தந்தை தலைவர் கலைஞர் கூட தோல்விகளை தாண்டி வந்தவர்தான் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தேர்வின் வெற்றி, தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள். பெற்றவர்கள், உங்கள் நண்பர்கள் யாரும் நீங்கள் டாக்டர் ஆகவில்லை, என்ஜினியர் ஆகவில்லை என்று உங்களை வெறுக்கப்போவது இல்லை என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

உங்களை இழந்த உங்கள் பெற்றோரின் வலியை எதுவும் சரிசெய்யாது. நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதில்தான் அவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு இருக்கிறது என்றும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்