Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப்பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

செப்டம்பர் 11, 2020 05:30

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 43 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 128 பணி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், 22,436 பயனாளிகளுக்கு 331.10 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டும், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய கட்டிகளை திறந்து வைத்து வருகிறார்.

அதனடிப்படையில் நேற்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்  வருவாய்த் துறை சார்பில், 2,668 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்- மகளிர் திட்டம் மூலம் 14,420 பயனாளிகளுக்கு ரூ.258.83 கோடி மதிப்பிலும் மொத்தம் 17,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதே விழாவில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கத்தி்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ரூ.190.08 கோடி மதிப்பிலான 2,112 அடுக்கு மாடிக் குடியிருப்புகளையும், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ரூ.3.05 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.

இவை தவிர, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளிக் கட்டடம், துணை சுகாதார நிலைய கட்டடங்கள், ஊரக வளா்ச்சித் துறை சார்பில் தலா ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் 19 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் உள்பட மொத்தம் 128 புதிய கட்டடங்கள் எனமொத்தம் ரூ.291.20கோடி மதிப்பில் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

அதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட 17 துறை சார்பில் 22,436 பயனாளிகளுக்கு ரூ.331.10 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாவட்டத்தின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும், சுய உதவி குழுக்கள், சிறு குறு தொழில் வர்க்கத்தினர், விவசாய பெருமக்கள் என பலருடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்