Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக பொதுக்குழுவில் பொதுக் கோட்டாவில் பதவி பெற்ற ஆ.ராசா

செப்டம்பர் 10, 2020 09:55

சென்னை: பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய நடந்த திமுகவின் பொதுக்குழு கூட்டம், மூத்த தலைவர்களை சரிகட்டி திருப்திப்படுத்தும் கூட்டமாக நடந்து முடிந்துள்ளது. எல்லோருக்கும் பதவியைக் கொடுத்து சீனியர்களை சரிகட்டிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கான டாஸ்க்குகளையும் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

மார்ச், 2019-ல் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைந்த பின்னர், அடுத்த பொதுச் செயலாளராக கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் பெயர்தான் முதலில் பேசப்பட்டது. ஆனால், அதில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரின் பெயர்கள் போட்டியாக இணைய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விவாதிக்கபட்டது.

சமூக ஊடகங்களில் தலித் இளைஞர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆளுமைக்கு திமுகவில் பொதுச் செயலாளர் பதவியோ, பொருளாளர் பதவியோ தர வேண்டும் என்று வலியுறுத்தினர். திமுக தொடர்ந்து பட்டியல் இனத்தவருக்கு முக்கிய பதவிகளை அளிக்காமல் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று விமர்சனம் வைத்தனர். 

அதே நேரத்தில், பொருளாளர் பதவிக்கு எ.வ.வேலு, ஆ.ராசா, பெயர்கள் விவாதிக்கப்பட்டபோது, திமுகவின் மற்றொரு மூத்த தலைவரான பொன்முடியும் பெயர் விவாதிக்கப்பட்டது. எ.வ.வேலுவுக்கு பதவி என்றால், நிச்சயமாக பொன்முடிக்கும் பதவி தர வேண்டும் என்ற ஒரு தார்மீக அழுத்தம் திமுக தலைமைக்கு இருந்தது.

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் மனு தாக்கல் செய்தனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்திலும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல், தனி நபர் இடைவெளியுடன் அண்ணா அறிவாலயத்தில், திமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. பொதுக் குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் பொதுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். 60க்கும் மேற்பட்ட இடங்களில் காணொலி வாயிலாக பல உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

எதிர்பார்க்கப்பட்டது போல, திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுவரை திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவிக்கு 3 பேர் நியமனம் செய்யலாம் என்றிருந்த நிலையில், துணைப் பொதுச் செயலாளராக பொன்முடியும் ஆ.ராசாவும் அறிவிக்கப்பட்டனர்.

திமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், தனக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த நெருக்கத்தையும் கட்சியின் மீது தனக்குள்ள உறுதியான பிடிப்பையும் பேசினார். துரைமுருகன் பற்றி பேசிய மு.க.ஸ்டாலின், துரைமுருகனே நெகிழ்ந்து கண்ணீர் விடும்படி பேசினார். துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் பொதுச்செயலாளராக பொருளாளராக உள்ள போது நான் திமுக தலைவராக இருப்பது பெருமை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 
துரைமுருகனுக்கும் தனக்கும் கட்சி ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் இருந்த உறவை பேசினார். 

அதே போல, டி.ஆர்.பாலுவுக்கும் கலைஞருக்கும் இருந்த பிணைப்பு, அவருடைய ஆளுமை பற்றி புகழ்ந்து பேசினார். ஏற்புரை ஆற்றிய ஆ.ராசா, கலைஞர், துரைமுருகன், ஆ.ராசா மூவரும் சந்தித்தபோது, நடந்த ஊரையாடலைக்க் குறிப்பிட்டு திமுகவில் துரைமுருகன் கட்சியில் மிகவும் சீனியர் என்பதைக் கூறினார். மூத்தவர்கள் அமரும் மேடையில் எனக்கும் இடம் அளித்துள்ளீர்கள் என்று நன்றி தெரிவித்தார். மேலும், இந்த பதவிக்கும் தேர்ந்தெடுக்கபட்டதில் தன்னுடைய ஒரு மகிழ்ச்சியை கூறினார். 

திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக ஆதி திராவிடர் பிரிவினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏற்கெனவே அந்தியூர் செல்வராஜ் உள்ளார். அதையும் தாண்டி துணைப் பொதுச் செயலாளர் பதவியை 5 ஆக்கி பொது இடத்தில் என்னை நியமித்திருக்கிறீர்கள் என்று கூறிய ஆர்.ராசா சமூக நீதிப் பார்வையில் இதனை வரவேற்றார்.

எல்லோருக்கும் பதவி கொடுத்து, சீனியர்களை சரிகட்டுவதோடு, விட்டுவிடாமல், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கான டாஸ்க்குகளையும் நிகழ்ச்சியில் மேலோட்டமாக சொல்லியிருக்கிறார். அது என்னவென்றால், தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். ஆனால், சாதாரணமாகப் பெற முடியாது. வெற்றி பெற மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தேர்தலில் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்களை சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்