Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் வளர வேண்டும் என்று நினைத்தால் புதிய கல்வி கொள்கையை ஆதரிக்கவேண்டும்: பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கோரிக்கை

செப்டம்பர் 10, 2020 08:48


திருவாரூர்: ''தமிழ் வளர வேண்டும் என்று நினைத்தால் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவேண்டும்,''  என முத்துப்பேட்டையில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தி.மு.க.வின் அனைத்து சூழ்ச்சிகளை முறியடித்து எங்கள் கூட்டணி ஒரு மகத்தான வெற்றியை பெறும். தி.மு.க. வேலையே என்னவென்றால் தேர்தல் நெருங்கி விட்டால் பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த முறை தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எந்தவிதத்திலும் எடுபடாது. ஏனென்றால் பாரதப்பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைவைத்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

இப்போது தி.மு.க. கையில் எடுத்துள்ள புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிரான டீசர்ட் பிரச்சாரமும் எடுபடாது. மத்திய அரசு வழங்கிய நிவாரண தொகையில் முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆகையால் அதில் உடனடியாக விசாரணை செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக கிராமங்களுக்கு சென்று வீடுதோறும் கையெழுத்து இயக்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை வந்துவிட்டால் தமிழ் மொழிக்கு நல்லதொரு எதிர்காலம் மற்ற மாநிலங்களிலும் தமிழ் மொழியை ஆரம்பப் பள்ளியாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதனால் தமிழ் வளருமே தவிர வீழ்ந்து போகாது.

தமிழ் வளர வேண்டும் என்று நினைத்தால் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவேண்டும். தி.மு.க. மற்றும் அவர்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள்தான் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். ஆனால், அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளை கற்றுக் கொடுக்கின்றார்கள்.

வசதி படைத்தவர்கள் மும்மொழி கொள்கையை பின்பற்றி அவர்கள் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழியை கற்றுக் கொடுக்கின்றார்கள். மூன்று மொழிகள் தெரிந்து கொண்டால் நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அவரவர் தொழில் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மத்திய அரசு இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று எங்குமே சொல்லவில்லை. 24 மொழிகளில் எந்த மொழி வேண்டுமானாலும் மூன்றாவது மொழியாக படிக்கலாம் என்று கூறுகின்றது. ஆனால், அதை தி.மு.க. இந்தியைத் திணிக்கின்றது மத்திய அரசு என்று பொய் பிரச்சாரம் செய்கின்றது. இன்றைக்கு மக்கள் தெளிவாக உள்ளார்கள். மூன்று மொழியை கற்றுக் கொண்டால் நல்லது என்று மக்களுக்கு தெரிகின்றது. மாணவர்களுக்கு தெரிகிறது. ஆகையால், அந்தக் காலம் மாதிரி மாணவர்களை தூண்டி எந்த போராட்டம் இங்கு நடக்காது. இவ்வாறு கருப்பு முருகாணந்தம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோட்டூர் ராகவன், நாகை மாவட்ட மேற்பார்வையாளர் சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்