Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை- போடி ரயில் திட்டத்தில் மண் கரைகளில் விரிசல்

செப்டம்பர் 02, 2020 08:04

ஆண்டிபட்டி:  மதுரை- போடி அகல ரயில்பாதை திட்டத்தில் மண் கரைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தண்டவாளங்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி- மதுரை அகல ரயில்பாதை பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் 43 கிமீ தூரமுள்ள மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் பணி முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளும் ஏறக்குறைய 80 சதவீதம் முடிந்து விட்டது. 

இப்பகுதியில் தண்டவாளங்கள் வைக்கப்பட்டு, மண்கள் கீழே சரியாதவாறு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தரையில் இருந்து தண்டவாளம் வரை உயர்த்தி வைத்துள்ள மண் கரைகள் பெயர்ந்து பல பகுதிகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் தண்டவாளங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழையால் அகல ரயில் பாதை பணியில் அமைத்துள்ள மண் கரைகள் பெயர்ந்து பள்ளம் உண்டாகி விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே மண் கரைகளை உறுதி தன்மையுடன் அமைக்க வேண்டும். தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான அகல ரயில் பாதை திட்டப்பணிகளை எந்தவித சேதமும் இல்லாமல் தரமான முறையில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தலைப்புச்செய்திகள்