Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் திருப்பூர் காய்கறி சந்தை

செப்டம்பர் 02, 2020 08:02

திருப்பூர்: ஒரே மழைக்கு திருப்பூர் காய்கறி சந்தையை வெள்ளம் சூழ்ந்ததால், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையொட்டி பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டபோது, வியாபாரிகள் தரப்பில் கடும்எதிர்ப்பு கிளம்பியது.

வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய சந்தை அமைத்து தருவதாக, மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, காட்டன் மார்க்கெட் வளாகத்துக்கு கடைகள் மாற்றப்பட்டன. காய்கறி சந்தையில் சுமார் 250 கடைகள் இயங்குகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்தமழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகளை மழைநீர் சூழ்ந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைகள், கொத்தமல்லி, புதினா என அனைத்தும் நனைந்து நாசமாகியது.

இதுதொடர்பாக வியாபாரிகள், பொதுமக்கள் கூறும்போது, ‘‘நாள்தோறும் சந்தைக்கு வரும் சிறு மளிகை வியாபாரிகள், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வாங்காவிட்டால் தேங்கி அழுகி விடும். தற்போது, பெரிதும் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு போதிய வசதிகளை செய்து தராததால், 20-க்கும்மேற்பட்ட கொத்தமல்லி மற்றும் புதினா மூட்டைகள் மழைநீரில் மூழ்கிவிட்டன. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, எங்கள் கடைகளை அங்கிருந்து மாநகராட்சி அப்புறப்படுத்தியது. ஆனால், புதிய இடத்தில் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர். சந்தை வளாகத்தில் நேற்றுகாலை தொடங்கி மழைநீர் வெளியேற்ற பல மணி நேரமானதால், சிறு மளிகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

தலைப்புச்செய்திகள்