Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிறுவன ஊழியரின் கழுத்தை அறுத்த காற்றாடி நூல்: பட்டம் விட்ட மூவர் கைது

ஆகஸ்டு 30, 2020 03:17

திருவள்ளூர்: திருவள்ளூரில் தனியார் விமான நிறுவன ஊழியரின் கழுத்தை பதம்பார்த்த காற்றாடி நூல் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர் சத்தியமூர்த்தி. அவருக்கு வயது 39. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் தனியார் விமான நிறுவனத்தில் மெக்கானிக் ஆக பணியாற்றி வருகிறார்.

அவர், இரவு பணிக்கு இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்றபோது மணவாளநகர் மேம்பாலத்தில் காற்றாடி நூல் அறுந்து பரந்து வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற போது கழுத்தை அறுத்தது. அதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு சட்டை முழுக்க ரத்தமாகி திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் காற்றாடி விட்டதாக மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், தீனதயாளன், ராஜ ரூபேஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னையில் காற்றாடி நூல் விபத்தை ஏற்படுத்தி பலரது உயிரை பறித்து உள்ள நிலையில், சென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தில், காற்றாடி நூலால் ஒருவர் கழுத்து அறுபட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்