Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமநாதபுரம் அருகே வங்கியில் 2.5 கிலோ நகை மோசடி

ஆகஸ்டு 29, 2020 08:40

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது, மஞ்சூர். இங்குள்ள வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றவர்களில் கண்ணன் மற்றும் பாலசுந்தரி ஆகியோர் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்தி நகைகளை மீட்டபோது, தலா ஒரு நகை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கியில் நகை மதிப்பீட்டாளரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வங்கிக்கிளை மேலாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வங்கியின் தூத்துக்குடி மண்டல அலுவலக தலைமை அதிகாரி காந்தி, வங்கிக்கு நேரடியாக வந்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

அந்த வங்கி கிளையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த நகை மதிப்பீட்டாளரான, ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மணிநகர் முதல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வாடிக்கையாளரின் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டபோது, நகைக்கடன் பெற்று செல்லும் வாடிக்கையாளர்களின் நகைகளை முழுமையாக வங்கியில் வைக்காமல் அதில் குறிப்பிட்ட நகைகளை மணிகண்டன் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இவ்வாறு வங்கியில் நகைக்கடன் பெற்றவர்களின் 153 நகைக்கடன் கணக்குகளில் 2 கிலோ 347 கிராம் தங்க நகைகளை நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் மோசடி செய்துள்ளாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த மோசடி குறித்து வங்கி தலைமை அதிகாரி காந்தி, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்தார்.

அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து நகை மதிப்பீட்டாளர் மணிகண்டனை தேடிவருகிறார். பெரிய அளவில் நடந்துள்ள இந்த மோசடியில் வங்கியில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஏனெனில் வங்கியில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் மட்டும் தனி ஆளாக இருந்து இந்த அளவிற்கு அதிக மதிப்புள்ள நகைகளை மோசடி செய்திருக்க முடியாது என்பதால் இதில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மோசடி சம்பவம் அந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்