Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அஞ்சலக ஊழியரால் 100 பேருக்கு பரவியது கொரோனா

ஆகஸ்டு 26, 2020 04:36

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தில், ஓய்வூதியம் வினியோகித்த அஞ்சலக ஊழியரிடம் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வனபார்த்தி அடுத்த சின்னம்பவி என்னும் கிராமத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு தலைமை அலுவலகத்தில் இருந்து ஓய்வூதிய தொகையை வினியோகிக்க அஞ்சலக ஊழியர் கிராமத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இருந்து கொரோனா தொற்று பரவல் துவங்கியுள்ளது.

அஞ்சலக ஊழியரிடம் நேரடி தொடர்பில் இருந்த ஓய்வூதியதாரர்கள் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மாவட்ட அளவில் மெகா கொரோனா பரிசோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கில் உள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, வனபார்த்தியில் 21 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. கடந்த ஒரு வாரத்தில், மாவட்டத்தில் 337 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தெலுங்கானாவில் இதுவரை 1,11,688 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 780 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 3,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்