Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கிய முகூர்த்த நாட்கள்: 23, 30-ந்தேதிகளில் முழு ஊரடங்கை அரசு விலக்கி கொள்ள முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்

ஆகஸ்டு 22, 2020 06:57

சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில். இன்னும் மீதமுள்ள 2 ஞாயிற்றுக்கிழமையிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா உள்ளிட்டவை திருமண மண்டபங்களில் நடத்த அனுமதி இல்லை. அதே சமயம் 50 பேருக்கு மிகாமல் சுப நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் எனவும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதாவது, திருமணம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் மணமகன், மணமகள் ஆதார் நகல் மற்றும் திருமண பத்திரிக்கை ஆகியவற்றை இணைத்து அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 4 மாதங்களாக ஏராளமான திருமணங்கள் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடந்து வருகிறது. இந்த மாதத்தில் நாளை(23-ந்தேதி), 24, 28, 30, 31 ஆகிய தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகள் வைத்து கொள்ள மணமக்களின் பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, திருமணம் அதிகமாக நடைபெறும் சுபமுகூர்த்த நாட்களான நாளை(23-ந்தேதி) மற்றும் 30-ந் தேதிகள் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்றைய தினம் வாகனங்களில் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மணமக்களின் உறவினர்கள் செல்லவும் முடியாது. இதனால் திருமணத்தை முன்கூட்டியே முடிவு செய்த குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்த நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை(23-ந்தேதி) மற்றும் 30-ந் தேதியில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடத்த ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் முழு ஊரடங்கு வருவதால் திருமணம், உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் நடத்த ஏற்பாடு செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நாளை(23-ந்தேதி) மற்றும் 30-ந் தேதிகளில் அமலில் உள்ள முழு ஊரடங்கை விலக்கி கொள்ள அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திருமணங்களை ஏற்பாடு செய்துள்ள மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்