Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய மனு தள்ளுபடி

ஆகஸ்டு 18, 2020 09:54

சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூடியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அரசு தரப்பின் இறுதி வாதத்தில் தூத்தக்குடி சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு அரசுக்கு வேறு வழியில்லை. 

தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் காற்று வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் உயர்ந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் மூடப்பட்டது. மேலும் ஆலைத் தொடங்கி தற்போது வரை 20 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டிய பின்னரும் ஆலையை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிடப்பட்டது. 

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமாசுந்தரம் மற்றும் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த ஜனவரி 8-ம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்