Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரலாற்றில் முதல்முறை; டைம்ஸ் சதுக்கத்தில் தேசியக்கொடி நிகழ்த்திய ஆச்சரியம்

ஆகஸ்டு 16, 2020 01:45

புதுடெல்லி: நமது நாட்டின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏராளமான தன்னலமற்ற தலைவர்களின் உயிர் தியாகம், போராட்டம் ஆகியவற்றின் விளைவாக கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காப்பது பெருமைப்பட நினைவுகூறுவது அவசியம். இதனை உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். சுதந்திர தினத்தன்று பல்வேறு புதுமைகளும், ஆச்சரியப்படும் சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதில் ஒன்று நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம் பகுதியில் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று பறந்த தேசியக்கொடி..

இந்தப் பகுதி உலகின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்திய - அமெரிக்க நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் நேற்றைய தினம்(ஆகஸ்ட் 15) தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் கவுன்சில் ஜெனரல் ஆஃப் இந்தியா ரந்திர் ஜெய்ஸ்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதற்காக இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தலைவர் அலோக் குமார் கூறுகையில், கோவிட்-19 நோய்த்தொற்று காலக்கட்டத்திலும் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதேசமயம் அனைவரும் உரிய சரீர இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். டைம்ஸ் சதுக்கத்தில் இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. தாய்நாட்டிற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்றார். இதுபற்றி ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், தேசியக்கொடியை ஏற்றி வைப்பது எந்தவொரு தருணத்திலும் பெருமை தரும் விஷயம் தான். அதுவும் டைம்ஸ் சதுக்கத்தில் நிகழ்ந்த்து கூடுதல் சிறப்பு.

இதனைச் செய்வதில் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார். இதேபோல் எம்பயர் ஸ்டேட் கட்டடத்திலும் மூவர்ணக் கொடியின் நிறங்கள் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். நியூயார்க் நகரில் ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின் போதும் இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் கூடுவர். பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்தும் ரத்தும் செய்யப்பட்டிருந்தன.

தலைப்புச்செய்திகள்