Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இ.ஐ.ஏ-2020 வரைவு எதிர்கால தலைமுறைக்கு பேரழிவை ஏற்படுத்தும்: ராகுல் குற்றச்சாட்டு

ஆகஸ்டு 10, 2020 06:34

புதுடெல்லி: இ.ஐ.ஏ-2020 (EIA 2020- Environment Impact Assessment) வரைவு நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இழுக்கு மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட என காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்தார்.

காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: இ.ஐ.ஏ-2020 (EIA 2020) வரைவு நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இழுக்கு மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட. இந்த வரைவு ஒரு பேரழிவு. அது ஏற்படுத்தப்போகும் சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாக பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை ஒடுக்க, அரசு முயற்சி செய்கிறது. ஒவ்வொரு இந்தியரும் எழுச்சி பெற்று இந்த வரைவை எதிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள், இந்த காரணத்துக்காக நிச்சயம் போராட வேண்டும்.

இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம். அரசியல் மற்றும் கருத்தியல் நம்பிக்கைகளை கடந்த ஒரு போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும். சமீபத்திய கொரோனா தொற்று, மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே விளிம்பில் வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, சூழல் என்பது ஒரு சுருக்கமான சொல் அல்ல, அது அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் வாழ்வாதார பிரச்னை.

இ.ஐ.ஏ அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் நீண்டகால விளைவுகள் நமக்கும் எதிர்கால தலைமுறை இந்தியர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்ட இந்த வரைவு, சுற்றுச்சூழலுக்கு பெரிய தீமையை ஏற்படுத்தப்போவதுடன், மிகப்பெரிய சேதத்தை நாட்டுக்கு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்