Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவுக்கு 3 தலைநகர்; ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு

ஆகஸ்டு 10, 2020 06:06

திருப்பதி: ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு, வரும், 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.ஆர்.எஸ்.காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த, ஆந்திர அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி, கர்ணுால் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான திட்டத்திற்கு, 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். நேரடியாக பங்கேற்று சிறப்பிக்க இயலாத நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவாவது பங்கேற்க வேண்டும் என, அதில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அதே நாளில், ஆந்திராவில் வாழும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவும், பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் வருகை உறுதியானவுடன், ஆந்திர முதல்வர் நேரில் சென்று பிரதமருக்கு அழைப்பு விடுத்து, இரண்டு நிகழ்ச்சிகள் குறித்தும் விவரிக்க உள்ளதாக, ஆந்திர தலைமை செயலகத்தின் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்