Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுஷாந்த் சிங் மரணத்தில், உண்மை தகவல் வெளிவர வேண்டும்: உச்சநீதிமன்றம்

ஆகஸ்டு 06, 2020 07:29

புதுடெல்லி: திறமைமிக்க நடிகரான சுஷாந்த் சிங்கின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது.

இதற்கிடையே, சி.பி.ஐ., விசாரணைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பீஹாரை சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் சுஷாந்த் சிங், 34, ஜூன், 14ம் தேதி மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மகன் மரணத்தில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக, பீஹார் போலீசிடம் சுஷாந்தின் தந்தை சிங் புகார் அளித்தார்.

இதையடுத்து, ரியா மீது வழக்குப்பதிவு செய்த பீஹார் போலீசார், இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கினர். இதற்கிடையே, நேற்று முன்தினம், சுஷாந்த் தந்தையின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க, பீஹார் அரசு பரிந்துரைத்தது.இந்நிலையில், தன் மீதான வழக்கை, பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரியா தாக்கல் செய்த மனு, நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,“பீஹார் அரசின் பரிந்துரையை ஏற்று, சுஷாந்த் மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது,” என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஒரு திறமையான நடிகர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும். மும்பை போலீசார், நற்பெயர் பெற்றிருந்தாலும், விசாரணைக்கு சென்ற பீஹார் போலீஸ் அதிகாரியை, வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளது முறையல்ல.

இந்த வழக்கில், இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை குறித்த விவரங்களை, மும்பை போலீசார் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்