Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோர்ட் அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஆகஸ்டு 02, 2020 06:26

புதுடெல்லி : 'கோர்ட் அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார். 'கடந்த, ஆறு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதில், உச்ச நீதிமன்றத்துக்கும் பங்கு உள்ளது' என, அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்நிலையில், பிரசாந்த் பூஷன், மூத்த பத்திரிகையாளர், என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு, நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பேச்சு சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் போன்றவை, தவறான நடவடிக்கை என்பது போல, அதில் கூறப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தையும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ளது. ஆனால், அதை மீறும் வகையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு உள்ளது; இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்துக்கே எதிராக உள்ளது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, வரும், 4ல் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்