Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகாரில் கனமழையால் வெள்ளப் பெருக்கு: 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஆகஸ்டு 02, 2020 06:04

பாட்னா: பீகாரில் பெய்த தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் கடந்த இரண்டு வாரமாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 14 மாவட்டங்களைச் சேர்ந்த 45.39 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் துறை கூறியிருந்தது. இந்த எண்ணிக்கை சனியன்று 49.05 லட்சமாக உயர்ந்துள்ளது. முசாபர்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேர் வெள்ளத்தால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மாநிலத்தில் மொத்த சராசரி மழை பொழிவு 76.8 செ.மீ ஆக பதிவாகியுள்ளது. இது சராசரியை காட்டிலும் 46% அதிகம் ஆகும். இதனால் மாநிலத்தில் பாயும் பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக நேபாளத்திலிருந்து பீகாரின் வடக்கில் பாயும் அனைத்து ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களில் கால் பகுதியினர் கிழக்கு சம்பாரன், கோபால்கஞ்ச் மற்றும் சரண் ஆகிய மூன்று மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 29 அணியினர் இதுவரை 3.92 லட்சம் பேரை வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் கொரோனா சூழல் காரணமாக வெறும் 26,732 பேர்கள் மட்டுமே 19 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சமூக சமையற்கூடம் மூலமாக உணவு சமைத்து விநியோகித்து வருகின்றனர். 11 மாவட்டங்களில் 1,340 சமூக சமையற்கூடங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் 9 லட்சம் பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்