Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் உருவாகிறது மின்னணு ஆணையம்: சீன சார்பை குறைக்க நடவடிக்கை

ஜுலை 30, 2020 07:18

புதுடெல்லி: மின்னணு உற்பத்தியில், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் பொருட்டு, 'மின்னணு ஆணையம்' ஒன்றை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான திட்டத்தை அரசு இறுதி செய்திருக்கிறது.

இந்த ஆணையம், மின்னணு தயாரிப்பை ஊக்கு வித்து, அதன் மூலம், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இது குறித்து, இத்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைக்கப்படும் இந்த ஆணையம், நாட்டின் மின்னணு உற்பத்தியின் வளர்ச்சியை, முதல் கட்டத்தில் இருந்து கவனித்து வரும். நாட்டில் பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி பிரிவுகளை துவக்க, அரசின் சலுகைகள் கிடைப்பதை இது உறுதி செய்யும். இந்தியா மின்னணு ஏற்றுமதி மையமாக உருவெடுக்க வைப்பதையும், இந்த ஆணையம் நோக்கமாக கொண்டிருக்கும்.

மேலும், இந்த ஆணையம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தொழில் துறை நிறுவனங்களுக்கு உதவும். அத்துடன், உள்கட்டமைப்பு வசதி, அதிக நிதி செலவு, மின்சாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஏற்படும் பிரச்னைகளையும் நிவர்த்தி செய்யும்.சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த பொருட்களில், மின்னணு பிரிவின் பங்களிப்பு, 32 சதவீதமாகும். இதன் மதிப்பு, கடந்த நிதியாண்டு கணக்கின்படி, கிட்டத்தட்ட, 4.93 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

மின்னணு பிரிவில், வன்பொருட்கள் உற்பத்தி துறையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, விலை உள்ளிட்டவற்றில், அவற்றுக்கு சமமான நிலையில் நாம் இல்லை. பல்வேறு சிக்கல்களால், உள்நாட்டு வன்பொருள் உற்பத்தி துறையில், விலை, 8.5 - 11 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கிறது.மின்னணு தயாரிப்பு துறையில் இது போன்ற பிரச்னைகளை தீர்த்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, தயாரிப்புடன் இணைந்த சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்