Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுவதா?: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம்

ஜுலை 28, 2020 07:08

சென்னை: எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் நிறைய பேருக்கு வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதாகவும அதனால் தான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை எழுந்த பின்னர் பலர் பாலிவுட்டில் தங்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு அனுவங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தெடங்கி தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரை பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்சமீபத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாராவுக்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் குறித்து ரேடியோ மிர்ச்சிக்கு இப்படம் தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிகம் இசையமைக்கவில்லை?" என்ற கேள்விக்கு, "நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது." என வெளிப்படையாக தெரிவித்தார். 

இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் வெளியிட்டார் அவர் தனது ட்விட் பதிவில், "பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இந்த விவகாரம் நிரூபிக்கிறது," என குறிப்பிட்டிருந்தார்
சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரகுமான் அளித்த பதிலில் "இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்." என்று கூறினார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.பலரும் திரை உலகில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பிரச்சனை வெடித்த அன்றே கருத்து தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில் "வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை," என்று கூறியிருந்தார்.

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன். பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ரகுமான். தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டரில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்