Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி?: வனக்காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

ஜுலை 24, 2020 06:50

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் விதித்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு கடந்த மார்ச் 3வது வாரம் முதலே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல கொடைக்கானலில் அனுமதி அளிக்கப்படவில்லை. அத்துடன் அங்குள்ள தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் சென்று தங்கி இருக்கிறார்கள். பின்னர் அங்குள்ள வனத்துறையினரின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குச் சென்று இருக்கிறார்கள். அந்த ஏரியில் சூரி மற்றும் விமல் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி இருவருக்கும் அபராதம் விதித்தபின்னர் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி, விமலுக்கு உதவியதாக வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் எனில் கொடைக்கானலுக்கு நடிகர் சூரி மற்றும் விமல் ஆகியோர் வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இ-பாஸ் இல்லாமல் யாரும் இங்கு வர இயலாது. இ-பாஸ் எடுத்து வருவதாக இருந்தாலும், திருமணம், மருத்துவ அவசரம், மரணம், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமே வர இயலும். இதுதான் தற்போதைய விதியாக உள்ளது. இதனால் எப்படி இருவரும் கொடைக்கானலுக்கு வந்தார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி செல்ல நடிகர்கள் சூரி சென்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக கூறினார். விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தலைப்புச்செய்திகள்