Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தனியார் நிறுவன பஸ் சிறைபிடிப்பு

ஜுலை 21, 2020 02:49

கரூர்: தரகம்பட்டியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் தனியார் நிறுவன பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கரூரில் ஒரு தனியார் கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தரகம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் கரூருக்கு சென்று வேலை பார்த்து விட்டு அதே பஸ்சில் வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

இந்தநிலையில் அந்த பஸ் வழக்கம்போல் தரகம்பட்டிக்கு வந்து அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தரகம்பட்டியில் இருந்து புறப்பட்டது. தரகம்பட்டி கடைவீதியில் வந்த அந்த பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில்
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை தினமும் ஏற்றி செல்கின்றனர். இதனால் தொழிலாளர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடிவதில்லை.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. இங்கிருந்து தொழிலாளர்கள் கரூர் பகுதிக்கு சென்று வருவதனால் தான்இ இப்பகுதியில் கொரோனா தொற்று பரவுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தான் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சை சிறைபிடித்தோம் என்று கூறினர். 

இதையடுத்து சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். இதனால் தரகம்பட்டியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்