Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனப் படைகள் வாபஸை வரவேற்கிறேன்: எங்கிருந்து வாபஸ் பெற்றார்கள்: ப.சிதம்பரம்

ஜுலை 09, 2020 09:35

புதுடெல்லி: சீனப் படைகள் வாபஸ் பெற்றதை வரவேற்கிறேன். ஆனால் அவர்கள் எங்கிருந்து  வாபஸ் பெற்றார்கள்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் கூறியதாவது:

சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது? என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா? அதுபோல் தற்போது எந்த இடத்தில் அவை நிலை கொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியுமா? அது போல் இந்திய படைகளும் எந்த இடத்திலிருந்து பின்வாங்கின?.

சீன ராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ ஒரு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்னொரு எல்லைக்கு நகர்ந்தனரா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் அவசியமானது. ஏனெனில் கடந்த ஜூன் 15ம் தேதி எந்த இடத்தில் என்ன ஆனது என்பதை கண்டறிய இந்திய மக்கள் புதையல் வேட்டை போல் தேடி வருகிறார்கள் என ட்விட்டரில் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக்கில் உள்ள கல்வானில் கடந்த மே மாதம் முதல் இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பாங்கோ ஏரியில் திடீரென இருதரப்பினருக்கும் இடையே மே மாதம் கைகலப்பு நடந்தது. இதை பேசி தீர்ப்பதற்குள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15ம் தேதி அத்துமீறிய சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இதுநாட்டு மக்களை கொந்தளிப்புக்குள்ளாக்கியது. பின்னர் ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இதையடுத்து இரு நாட்ள் கழித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன ராணுவ அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வீடியோ காலில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சீன ராணுவம் 1.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கியதாக செய்திகள் வந்தன. அது போல் இந்திய படைகளும் பின்வாங்கின. எனினும் பாங்காங் ஏரி பகுதியில் சர்ச்சைக்குரிய பிங்கர் பகுதியில் குறைந்த அளவிலான சீன ராணுவத்தினர் நடமாட்டம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் கல்வான் பிரச்சினை குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ப சிதம்பரத்தின் கேள்விகளை ட்விட்டர்வாசிகள் சிலர் வரவேற்றும் சிலர் எதிர்த்தும் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்