Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: திருச்சி ஆட்சியர் தகவல்

ஜுலை 04, 2020 08:19

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜூலை மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஆட்சியா் சிவராசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சிவராசு கூறியதாவது:

கொரோனா பொதுமுடக்கம் ஜூலை 31ம் தேதி இரவு வரை அமலில் உள்ளது. இருப்பினும், தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு முடக்கத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஜூலை 5, 12, 19, 26ம் தேதிகளில் எந்தவிதத் தளா்வுகளும் இல்லாமல் மாவட்டம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும். சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும். மேலும், மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடா் தணிக்கை துறை அமல்படுத்தியுள்ள முழு முடக்க உத்தரவில், அத்தியாவசியத் தேவையான பால் விநியோகத்துக்கு அனுமதியளிக்கப்படும். இதேபோல, மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், அமரா் ஊா்தி சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

தனியார் வாகனங்களை அவசர மருத்துவச் சிகிச்சை உதவிக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும். கொரோனா தடுப்புக் களப்பணியாளா்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் அடையாள அட்டைகளுடன் மாவட்டத்துக்குள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்படுவா். திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முழு முடக்க நாள்களில் வீடுகளிலேயே இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் கொரோனா பரவலை முழுமையாகத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்