Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தொற்றால் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மரணம்; முதல்வர் இரங்கல்

ஜுன் 27, 2020 02:46

சென்னை: கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த  தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ராஜ் தொலைக்காட்சியில், செய்திப் பிரிவில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த  வேல்முருகன் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தநிலையில்  காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்.

மக்களுக்கும், அரசுக்கும் இடையில் இணைப்பு பாலமாக இருந்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் நண்பர்கள், செய்திகளை சேகரிக்க செல்லும் போது, மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறு நான் அன்போடு இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிக்கையாளர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட இந்த அரசு, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்கிவரும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவு மற்றும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது வாரிசுதாராருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என நான் அறிவித்திருந்தேன் .

இதனடிப்படையில், வேல்முருகன் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க  உத்தரவிட்டுள்ளேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்