Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜுன் 26, 2020 02:09

லடாக்: கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை விலக்கி கொள்ளும் புரிந்துணர்வை செயல்படுத்தத் தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகிறது. அண்மையில் அத்துமீறி கூடாரம் அமைத்த சீன ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் சண்டை போட்டனர்.

இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த எண்ணிகையை வெளியிட சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்கிடையே கடந்த மே மாதம் முதலே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து ஏராளமான படைகளை ஆயுதங்களை சீனா தொடர்ந்து குவித்து வருகிறது. ஒரு பக்கம் சண்டை வேண்டாம். சமாதானமாக போகலாம் என்று கூறும் சீனா, மறுபக்கம் படைகளை குவித்து ஆயுதங்களையும் குவிப்பது இந்தியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் இந்த தொடர் அத்துமீறல் மற்றும் அடாவடி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கிடம் பேசும் போது வெளிப்படையாக எச்சரித்து கண்டித்தார்.

இதனிடையே அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்களில் சீனா படைகளை குவிப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை விலக்கி கொள்ளும் புரிந்துணர்வை செயல்படுத்தத் தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில் சீன ராணுவத்தின் படை குவிப்பு தொடங்கிய பின்னர் முதல் தடவையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஐ.சி.) பகுதியில் சீனாவின் படை குவிப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட அறிக்கையில், சீனப் படைகளின் நடத்தை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் "முற்றிலும் புறக்கணிப்பதாக" உள்ளது என்று கடுமையான எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்,

இதனிடையே கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது, மேலும் சீனா படைவிலகல் ஒப்பந்தத்தை எவ்வாறு பின்பற்றுகிறது என்பதையும் இந்தியா பார்த்து வருகிறது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தனது உரிமை மற்றும் நலன்களை இந்தியா எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காது என்ற கள எதார்த்தத்தை சீனா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

அண்மையில் ஷியோக்கில் ஒரு பாலம் அமைக்கும் பணியை கைவிட்டது போன்று சீன துருப்புக்கள் பின்வாங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. எல்லையை மீறுவது மற்றும் இந்திய பிரதேசத்தில் ஊடுருவுவது போன்ற தந்திரமான செயல்களில் ஈடுபடுவது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை விரிசலுக்கு வழிவகுக்கும் என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்