Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர் புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தம்

ஜுன் 26, 2020 10:18

திருச்சி: திருச்சியில் இருந்து தஞ்சாவூர் புதுக்கோட்டைக்கு நேரடியாக இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் நலன்கருதி தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களில் பயணித்த பயணிகள் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் சென்று வந்தனர்.

இந்நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பஸ்கள் 25-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கப்படும். ஒரு மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றே செல்லவேண்டும் என அறிவித்தார். முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் திருச்சியில் இருந்து இதுவரை தஞ்சாவூர் நாகை கும்பகோணம் திருவாரூர் மன்னார்குடி வேளாங்கண்ணி காரைக்கால் ஆகிய இடங்களுக்கு நேரடியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

மாறாக அந்த பஸ்களில் திருச்சி மாவட்ட எல்லையான தேவராயனேரி என பஸ்சின் முன் பக்க கண்ணாடியில் துண்டு சீட்டு ஒட்டப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் செல்லவேண்டிய பயணிகள் தேவராயனேரியில் இறங்கி தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் நிற்கும் பஸ்களில் ஏறிச் சென்றனர். அப்போது அவர்கள் மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் கடும் சிரமப்பட்டே சென்றதை காண முடிந்தது.

தலைப்புச்செய்திகள்