Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாறாங்கற்களை வைத்து சாலையை கிராம மக்கள் துண்டித்ததால் பரபரப்பு

ஜுன் 26, 2020 09:54

திண்டுக்கல் : வெளியூர்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வருவோர் குறுக்கு வழி மூலம் சோதனை சாவடியை கடந்து வருகின்றனர். இதனால் அவ்வாறு வருவோரை தடுக்க கிராம மக்கள் பாறாங்கற்களை வைத்து சாலையை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி மாவட்டத்துக்குள் நுழைய முயலுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் வாகனங்களை சோதனையிடுவதற்காக திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள போலீசார் இ-பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்துக்குள் நுழைய முயலுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வரும் சிலர் கல்வார்பட்டி சோதனை சாவடிக்கு முன்பு குறுக்கு வழியாக உள்ள காந்திநகர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் செல்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து மண்பாதை வழியாக சோதனை சாவடி இருக்கும் இடத்தை தாண்டி கல்வார்பட்டிக்கு வந்து மீண்டும் நான்கு வழிச்சாலையை அடைந்து திண்டுக்கல்லுக்கு வருகின்றனர். இதுபோன்று தினமும் அதிக அளவில் காந்திநகர் வழியாக வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர்.

இதனால் எங்கே தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் காந்திநகர் கிராம மக்கள் அங்குள்ள சாலையின் குறுக்காக பாறாங் கற்களை அடுக்கி வைத்து போக்குவரத்தை துண்டித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்களின் இந்த செயலால் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அந்த சாலையை கடந்து செல்வது முழுமையாக தடுக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்