Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

30 சதவீதம் சம்பளத்தைக் குறைக்கிறேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

ஜுன் 16, 2020 10:04

சென்னை: தனது சம்பளத்தை 20 முதல் 30 சதவிகிதம் வரை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழில், இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என்று டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கை கதையான, நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். 

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மைதான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், மனைவியாக, சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

பின்னர் சில காரணங்களால் விலகினார். இப்போது தமிழில் பெண்குயின் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைமில் நேரடியாக வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு, மலையாள மொழிகளிலும் இது ரிலீசாகிறது. இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் ஸ்டோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: சர்கார் படத்துக்கு பிறகு தமிழில் நான் நடித்துள்ள படம், இது. இதில் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். இது வித்தியாசமான படமாக இருக்கும். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கிறேன். இந்த நேரத்தில் யோகா கற்றேன். பாதியில் விட்டிருந்த வயலினை மீண்டும் கற்றுக்கொண்டேன். இந்த லாக்டவுன் காரணமாக நான் நடித்துள்ள சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. 

சில படங்களின் ஷூட்டிங் முடியாமல் உள்ளன. இந்த லாக்டவுனால் சினிமாதுறை கடும் பொருளாதாரச் சிக்கலை சந்திக்கும். இதனால் சினிமா தொடர்புடைய அனைவரும் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டி வரும். நானும் எனது சம்பளத்தில் 20 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதம் வரை குறைத்துக்கொள்ள தயாராக இருக்கிறேன். அடுத்து நான் ஒப்பந்தமாக இருக்கும் படத்தில் இருந்து இந்த சம்பளக் குறைப்பை தொடர்வேன். இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷை தொடர்ந்து பல முன்னணி நடிகர், நடிகைகளும் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்