Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் திட்டம்: விரைவில் துவக்கம்

ஜுன் 14, 2020 09:48

சென்னை; ரேஷனில், 'பயோமெட்ரிக்' எனப்படும், கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யும் திட்டத்தை, இம்மாத இறுதியில் இருந்து செயல்படுத்த, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், முறைகேடுகளை தடுக்க, ரேஷன் கார்டில் உள்ளவர்கள் வந்தால் மட்டுமே, அத்தியாவசிய பொருட்களை வழங்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசு, பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை, நாடு முழுதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடைகளிலும் வாங்க, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.அனைத்து மாநில அரசுகளும், கார்டுதாரர்களுக்கு, கைரேகை, விழி ரேகை உடைய, 'ஆதார்' எண் அடிப்படையில், ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளன.

இதனால், தமிழகத்தில்,ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், கார்டுதாரர்கள் மட்டும் பொருட்கள் வாங்குவதை உறுதி செய்யவும், ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவியில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து உறுதி செய்ததும், பொருட்கள் வழங்கப்படும். அத்திட்டத்திற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, இம்மாத துவக்கத்தில், உணவுத் துறைக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில்,ஒப்பந்த நிறுவனத்திடம், கைரேகை பதிவு செய்யும் திட்டத்திற்கான பணி ஆணையை, தற்போது உணவு துறை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளை அச்சிடுவது, 'பாயின்ட் ஆல் சேல்' கருவியில் கார்டை, 'ஸ்கேன்' செய்து, பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து அந்நிறுவனம், இம்மாத இறுதியில் இருந்து, 34 ஆயிரத்து, 774 ரேஷன் கடைகளிலும், நவீன பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மற்றும் 'பில்' வழங்கும் அச்சு இயந்திரங்களை வைத்து, அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை துவக்க உள்ளது. நான்கு மாதங்களுக்குள், இதை முழுவதுமாக செயல்படுத்த, 38 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்