Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவை புறக்கணிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா: இந்தியாவுக்கு கைவசமாகும் ஏற்றுமதி வாய்ப்புகள்

ஜுன் 14, 2020 09:26

திருப்பூர்: சீனாவை, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் புறக்கணிக்க துவங்கியுள்ளதால், நம் நாட்டுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பின், முடங்கியிருந்த தொழில்துறை மீளத் துவங்கியிருக்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்தால்தான், அன்னிய செலாவணியை பெருமளவு ஈட்ட முடியும். அதேசமயம், உள்நாட்டிற்கான இறக்குமதியை குறைப்பதற்கான, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஜவுளித்துறையினர் கூறியதாவது:நம் நாட்டில் இருந்து, பருத்தி நுால் ஏற்றுமதி பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், கொரோனா பரவலுக்கு முன்பு, இருந்ததைக் காட்டிலும், சற்று விலை குறைத்து, ஏற்றுமதி செய்யும் நிலை உள்ளது. சீனா, பருத்தி நுாலை அதிகளவில் வாங்குகிறது.ஐரோப்பா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரத்தான பழைய ஏற்றுமதி 'ஆர்டர்'களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக விசாரணைகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.இவை வர்த்தகமாக மலர வேண்டும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, சீன ஆர்டர்களை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்து வருகின்றன. இதனால், நம் நாட்டுப் பொருட்களை வாங்கும் புதிய வர்த்தகர்கள் கிடைப்பர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கைவினை பொருட்கள் ஏற்றுமதிக்கழகத்தால்(இ.பி.சி.எச்.,) நடத்தப்பட்ட மெய்நிகர் பேஷன் நகை, அக்சசரீஸ் கண்காட்சியில், 81 நாடுகளைச் சேர்ந்த 1,200 வர்த்தகர்கள் பங்கேற்றனர்.பேஷன் நகை உற்பத்தி நிறுவனத்தினர் கூறுகையில், 'கண்காட்சியில் கிடைக்கப்பெற்ற, 150 கோடி ரூபாய்க்கான வர்த்தக விசாரணைகள், வர்த்தகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கின்போது, ரத்தான ஏற்றுமதி ஆர்டர்களையும் மீண்டும் பெற முயற்சித்து வருகிறோம்' என்றனர்.

தோல் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தவிர்க்க விரும்புகின்றன. இது, நம் நாட்டில் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்பை அதிகரித்துள்ளது' என்றனர்.இவ்வாறு, ஏற்றுமதிக்கான வர்த்தக விசாரணைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜவுளி, நகை உட்பட, தொழிலாளர் அதிகம் தேவைப்படும் பல்வேறு தொழில்துறையினர், சமூக விலகல், போக்குவரத்து உட்பட பிரச்னைகள் காரணமாக, திறன் வாய்ந்த மற்றும் போதுமான தொழிலாளர் இன்றி அவதிப்படுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்