Tuesday, 4th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீண்ட இடைவெளிக்கு பின் மீன் வரத்து அதிகரிப்பு: ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள்

ஜுன் 14, 2020 08:59

ஜெகதாப்பட்டினம்: கொரோனா பயம் இல்லாமல் ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நேற்று மீன் வாங்குவதற்காக சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெருந்திரளாக மக்கள் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கொரோனா தாக்கத்தினால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணி அளவில் 433 விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்றனர்.

வழக்கமாக காலை 6 மணிக்கு டோக்கன்கள் கொடுத்து கடலுக்குச் சென்று மறுநாள் காலையில் மீனவர்கள் வருவது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் ஒரு மணிக்கு கடலுக்குச் சென்றதால் 80 சதவீத விசைப்படகு மீனவர்கள் மட்டுமே தற்போது கரைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதலே ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் மீன்களை வாங்க பெருந்திரளாக மக்கள் குவிந்து வந்தனர். 

படகுகள் வந்த உடனேயே மீன்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டன. மீன்களை புத்தம்புதிதாக வாங்கிச் செல்ல வியாபாரிகளும் , பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கரையில் திரண்டிருந்தனர். கொரோனா பயமின்றி முகக்கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடந்த வாரம் திருப்பூர் தென்னம்பாளையத்தில் இதேபோல் மீன்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும் பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தீவிரமாக தாக்கி வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்